
மதிப்பிற்குரிய மாநகராட்சி அதிகாரி அவர்களுக்கு,
என் கோரிக்கையை தங்கள் முன் வைப்பதற்கு முன்னால் என்னை பற்றி ஓரிரு வரிகள். சொல்லி கொள்ள பெருமையாக எதுவும் இல்லை, வார நாட்களை பெங்களுரிலும், வார இறுதியை சென்னையிலும் கழிக்கும் சராசரி லட்ச தமிழர்களில் ஒருவன் நான். சென்னை சென்ட்ரலில் இறங்கி, மேற்கு மாம்பலத்தில் உள்ள என் வீட்டிற்கு மின்சார ரயில் மாறி வருவது வழக்கம், அந்த 17 நிமிட ரயில் பயணத்தில், ஒன்றை மட்டும் நான் கவனிக்க தவறியதே இல்லை. அது சென்னை நகரத்தின் சிறப்புகளில் ஒன்றான "ரிப்பன் பில்டிங் "தான். அதிலும் மாநகராட்சி கட்டிடத்தின் இரு பக்கத்திலும் எழுதி இருக்கும் இரு வாக்கியங்கள் எனக்குள் ஒரு சிறு வருத்தத்தை தரதான் செய்கின்றன. அது தான் "தமிழ் வாழ்க, தமிழ் வளர்க" என்னும் வாக்கியங்கள். அதை எப்படியாவது "வாழ்க தமிழ், வளர்க தமிழ்" என்று மாற்றி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. என்ன இரண்டிற்கும் பொருள் ஒன்று தானே என்று தாங்கள் என்ன கூடும். கம்ப இராமாயணத்தில் கம்பர் ஒன்றை கூறுவார். சீதையை தேடி செல்லும் ஹனுமான், சீதையை கண்டு வருவார். சீதை பற்றி தகவல் அறிய ஆவலுடன் காதுக்கும் ராமனின் வாடிய முகத்தை பார்த்து ஹனுமான் முதலில் "கண்டேன் சீதையை என்பார். சீதையை கண்டேன் என்று சொல்லாமல் கண்டேன் சீதையை என்று ஹனுமான் சொன்னதற்கு காரணமாக கம்பர் சொன்னது. " சீதையை என்று சொல்லி முடிப்பதற்குள் சீதைக்கு என்ன ஆயிற்றோ என்று ராமன் பதறி விடுவாரோ? இல்லை சீதையை பற்றி வேறு எதாவது தப்பாக நினைத்துவிடுவாரோ? என்ற எண்ணத்தில், பொருளை முதலில் சொல்லி பெயரை பிறகு ஹனுமான் சொன்னதாக சொல்லுவார். கம்பனின் திறமைக்கு இன்னொரு சாட்சி. அதே கவலை தான் அடியேனுக்கும். வாழ்க என்று சொன்னவுடன் வாழ்க ஹிந்தி என்றோ , வாழ்க ஆங்கிலம் என்றோ சொல்லி முடித்தால் தவறில்லை. பிற மொழி வாழ்ந்தால் எனக்கு வருத்தம் இல்லை. அனால் முதலில் தமிழ் என்றவுடன் யாரேனும் ஒழிக என்று முடித்து விட்டால் அதை ஏற்க்கும் பொறுமை எனக்கு இல்லை. தமிழ் வாழ நான் எதுவும் பெரிசாக செய்யாவிட்டாலும், வாக்கியமாவது என்னால் மாறினால் பெரிய சாதனை செய்த சந்தோஷம் எனக்கு கிடைக்கும். தாங்கள் தயவு செய்து என் விண்ணப்பத்திற்கு செவி சாய்க்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
இப்படி,
தமிழை வளர்க்க துடிக்கும்,
ஆறரை கோடி பேர்களில் ஒருவன்.
No comments:
Post a Comment